---------- Forwarded message ----------
From: ஸ்ரீ
Date: 2008/11/16
Subject: [muththamiz] வாரணம் ஆயிரம் - ஒரு திறந்த விமர்சனம்
To: முத்தமிழ் , பண்புடன்
, உலகத் தமிழ்
அன்பு நண்பர்களுக்கு,
வாரணம் ஆயிரம் படம் பற்றிய நமது குழுக்களின் கருத்துக்களை பார்த்தேன்.
ஆனால் ஒரு நல்ல விஷயம், உங்களின் விமர்சனங்களை படிக்கும் முன்னரே நான்
படத்தைப் பார்த்துவிட்டேன். இதனால் என்ன நல்ல விஷயம் என்றால்
படத்திலிருந்த அப்பத்தங்களை விரிவாக காண்பித்த அதே சமயம் சில அற்புதங்களை
நீங்கள் விட்டுவிட்டீர்களோ என்று எனக்கு சந்தேகம் வரும் அளவிற்கு படம்
நல்ல படமாக அமைந்தது. இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடம்
எந்தப் படத்தையும் பார்க்கும் முன்னர் சில விமர்சனங்களை படித்துவிடும்
பழக்கம் உள்ள நான் இனிமேல் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று
முடிவெடுத்ததுதான். ஒரு வேளை தசாவதாரமும் எனக்கு பிடிக்காமலே போனதற்கு
இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நாம் விமர்சனங்களை படித்துவிட்டு பின்
படம் பார்க்கும்போது அந்தந்த விமர்சகர்களின் கருத்துக்கள் நம் மனதில்
அடிக்கடி தலைகாட்டி படத்தை நமக்கு பிடித்த வகையில் பார்க்க இயலாமலேயே
போய்விடுகின்றது.
இந்த விமர்சனத்தையும் படம் பார்த்தவர்கள் மட்டுமே படிக்கும்படி
(அவர்களுடைய நல்லதுக்காகத்தான்) வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன். எனக்கு
பிடித்த நான் இரசித்த வரையிலேயே இந்த விமர்சனம் அமைந்திருப்பதால்
உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லையெனில் தயவு செய்து அதைப் பற்றி பேச
வேண்டாம்.
தமிழ் சினிமாக்களை மட்டும் என்று இல்லை, உலக சினிமா அனைத்திலுமே நான்
கற்றுக்கொண்ட ஒரு விஷயம், சினிமா என்று வந்துவிட்டால் லாஜிக்குகள் என்று
கூறப்படம் அர்த்தங்களை நாம் அதிகம் கவனிக்கக்கூடாது. சினிமா என்பதே ஒரு
பேன்டசிதான். பேய்ரி டேல் (Fairy Tale) என்று கதைகளில் ஒரு பிரிவு உண்டு.
இது நாம் சின்ன வயதிலிருந்து அம்மா, பாட்டி, அப்பா, ஆசிரியர் என்று
பலரிடம் கேட்ட கதைகள்தான். ஆனால் அதில் எந்தக் கதையிலும் அபத்தங்கள்
இல்லாமல் இருந்ததில்லை. இருப்பினும் நம்மால் அந்தக் கதைகளை மறக்கவோ
இரசிக்காமலோ இருக்க முடியாது. அதற்கு காரணம் அந்தக் கதை நம்மில்
ஏற்படுத்தும் பாதிப்புதான். சின்ன வயதிலேயே சில நல்ல விஷயங்களை இது போன்ற
சுவாரசியமான கதைகளில் புகுத்தி நமக்கு ஊட்டிவிடுவதால்தான் இன்னமும் பலர்
நல்லவர்களாகவே இருக்கின்றோம். அதுபோலவேதான் பேன்டசியும். அதில்
அர்த்தங்களை தேடிக்கொண்டிருப்பதைவிட அனுபவித்தல்தான் சுகம். இதைப்
புரிந்துகொள்ள எனக்கும் மிகவும் வருஷங்களாகிவிட்டது. ஒவ்வொரு படத்திலும்
அபத்தங்களை தேடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு அனுபவித்து பார்க்கும்
பழக்கத்தை நான் ஏற்படுத்திக்கொண்டது மிகவும் நல்லதாக முடிந்தது எனக்கு.
இதில் மற்றவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் இருந்தாலும்
எனக்கென்னவோ இதுதான் பிடித்திருக்கின்றது. இனி விமர்சனத்திற்கு...
கெளதம் மேனன் தன்னுடைய அப்பாவின் நினைவாக இயக்கியிருக்கும் படம்தான்
வாரணம் ஆயிரம். 'வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி
நடக்கின்றான் என்றெதிர்...' என்கிற ஆண்டாள் பாட்டிலிருந்துதான் படத்தின்
தலைப்பு. ஆண்டாள் தனது காதலனாகிய ஸ்ரீமன் நாராயணன் தன்னைக் கல்யாணம்
செய்துகொள்ள ஆயிரம் யானைகள் சூழ ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரை வலம் செய்து
வர அவரை ஆண்டாளின் தகப்பனார் பெரியாழ்வாரும் மக்களும் வரவேற்க பூரண
கும்பத்துடன் நிற்பதுபோல தான் கண்ட கனவை தோழிக்கு ஆண்டாள் கூறுவது
போலிருக்கும் இந்தப் பாடலின் தலைப்பு படத்திற்கு மிகப் பொருத்தம்
என்றுதான் எனக்குத் தோன்றியது. இதில் வாரணம் ஆயிரம் சூழ வலம் வருபவர்
சூர்யாவின் அப்பா கிருஷ்ணன். சூர்யாவும்தான் என்று படத்தின்
இறுதிக்காட்சியில் சிம்ரன் கூறுவார். இரண்டு பேருமே அவரவர் மனைவிக்கு
அரங்கனைப் போலிருந்தாலும் படத்தின் கதை மகன் சூர்யாவைச் சுற்றியே
வருகின்றது. அப்பா சூர்யா கதையின் பிரதான நாயகனாக இருந்தாலும் அவரையும்
மகனின் பார்வையிலிருந்து காட்டுவதின் மூலம் மகன்தான் பிரதான நாயகன் என்று
உணர்த்தியிருக்கின்றார் இயக்குநர். இனி கதைக்கு...
வயதான அப்பா கிருஷ்ணனிடமிருந்து ஆரம்பிக்கின்றது கதை. முடி திருத்தம்
செய்யப் போன சூர்யா திரும்ப வந்து குளியலறையில் இரத்த வாந்தி எடுக்க
டாக்டர்கள் தாம் முன்னமே கூறியபடியான நிலைக்கு வந்துவிட்டதாக கைவிரிக்க
தன் மகன் பெயரான சூர்யாவை சொல்லிவிட்டு சிரித்தபடியே உயிர்விடுகின்றார்.
அதே நேரம் இந்திய இராணுவத்தின் ஒரு முக்கியமான கடமைக்காக ஹெலிகாப்டரில்
சக இராணுவ வீரர்களுடன் பயனித்துக்கொண்டிருக்கின்றார் மேஜர் சூர்யா.
தொலைபேசியில் தன் தந்தை உயிர்விட்ட சேதியறிந்து மேற்கொண்டிருக்கும்
கடமையை முன்னிட்டு பொறுத்துக்கொண்டு இருந்துவிடும் மேஜர் சூர்யா அமைதியாக
இருந்தாலும் அவருள் இருக்கும் மகன் சூர்யா தன் அப்பாவைத் தேடி அலைய
அவருடைய பார்வையில் விரிகின்றது படத்தின் கதை.
ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் அரவணைப்பு என்றால் தந்தைதான் கதாநாயகன் என்று
ஆரம்பிக்கின்றது கதை. தன்னுடைய அப்பாவும் அம்மாவும் கொண்ட காதலையே
தனக்கும் இன்ஸ்பிரேஷனாக ஏற்றுக்கொள்ளும் சூர்யாவின் வாழ்க்கையில் அவருடைய
பெற்றோர் வகிக்கும் மாபெரும் பங்குதான் கதை என்றாலும் கதை மகன் சூர்யாவை
சுற்றித்தான் சுழலுகின்றது. அப்பா கிருஷ்ணன் அம்மா மாலினியை சந்தித்து
காதலித்ததை அம்மா மாலினி சொல்லக் கேட்கின்றார் மகன் சூர்யா. தன் தந்தையை
தனது கதாநாயகனாக வைத்திருக்கும் மகன் தன்னுடைய வாழ்க்கையின் எந்தவொரு
கட்டத்திலும் அப்பாவையே உதாரண புருஷராக எடுத்துக்கொள்கின்றார். ஒழுங்காக
படிக்காமல் எல்லா மகன்களையும் போல தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை
வீணடிக்கும் சூர்யாவுக்கு ஒரு இரயில் பயணத்தின்போது ஏற்படும் சந்திப்பு
தன்னுடைய அம்மாவை அப்பா சந்தித்த அந்த காதலான நினைவுகளை கொண்டுவந்து
அந்தப் பெண்ணுடன் பார்த்ததும் காதலில் வீழ்கின்றார். ஆனால் இப்படி
பார்த்தவுடன் காதலில் நம்பிக்கையில்லாமல் அந்தப் பெண் (சமீரா ரெட்டி)
தவிர்க்கப் பார்க்கும்போது தன்னுடைய தாயை தன் தந்தை எப்படி முழுதும்
அள்ளிக்கொண்டு போனாரோ அதுபோலவே அந்தப் பெண்ணையும் தன்னுடைய காதலால்
முழுதும் அள்ளிக்கொண்டு போவேன் என்று உறுதிகொள்ளும் சூா்யா ஒரு வாரம்
கழித்து அவளை வீட்டில் சந்திக்கின்றார். இன்னமும் இவர் ஞாபகம்
வைத்திருந்ததே ஆச்சரியப்படுத்தினாலும் இன்னமும் முழு நம்பிக்கை
வந்துவிடாத சமீரா அமெரிக்காவுக்கான தன்னுடைய பயணத்தைப் பற்றிக் கூற வேறு
வழியின்றி வீடுதிரும்பும் சூர்யா அமெரிக்கா செல்ல முடிவெடுக்கும் அதே
நேரம் அப்பா மைல்ட் ஹார்ட் அட்டாக்கில் படுத்த படுக்கையாக, காதல் கனவுகள்
என்று எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு பொறுப்பான பிள்ளையாக வேலை செய்தும்
தன்னுடைய கித்தார் இசைத் திறமையை வைத்தும் சம்பாதித்து அப்பா தொடங்கிய
வீட்டை கட்டி கடன்களை அடைத்து நல்ல நிலைக்கு வருகின்றார் மகன் சூர்யா.
அதன்பின் அப்பா அம்மாவின் ஆசீர்வாதத்துடன் அமெரிக்காவுக்கு விசா எடுத்து
காதலியைத் தேடி விரைகின்றார். அமெரிக்காவில் காதலியை சந்திக்க
ஆச்சரியத்தில் அவரின் காதலின் ஆழம் அறிகின்றார் காதலி. பிறகு மெல்ல மெல்ல
அவருக்கு இவரின் மேல் காதல் வர அதன்பிறகு எல்லாம் சுபமாக
முடியப்போகின்றது என்கிற எதிர்பார்ப்பிலிருக்கும்போது எதிர்பாராவிதமாக
நிகழும் ஒரு குண்டு வெடிப்பில் உயிர் துறக்கின்றார் காதலி சமீரா ரெட்டி.
தந்தையைப் போல தன் காதல் வாழ்வும் ஆனந்தத்தில் முடியாத வெறுப்பும்
காதலியை இழந்த துக்கமும் சூர்யாவை சுழலடிக்க எல்லாவித தீய
பழக்கத்திற்கும் அடிமையாகும் அவரை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றும் பெற்றோர்
அவரின் மேல் நம்பிக்கை வைத்து அவரையே உணர்ந்துகொள்ள வேண்டி தனியாக
காஷ்மீர் அனுப்புகின்றனர். காஷ்மீரில் தன்னை தேடி அலையும் சூர்யா
இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தபோது அமெரிக்காவிலிருந்து காதலி இறந்த
சோகத்தில் வந்தபோது விமானத்தில் சந்தித்த அற்புத மனிதர் ஒருவரின் அன்புப்
பிள்ளையை யாரோ கடத்திவிட்டதை அறிந்து அவரிருக்கும் டெல்லிக்கு சென்று
தன்னுடைய சொந்த முயற்சியால் கஷ்டப்பட்டு அந்த மனிதரின் மகனை
மீட்கின்றார். அதன்பிறகு பெற்றோரிடம் திரும்பும் சூர்யா தன்னுடைய
சின்னவயதிலிருந்து இருந்த இராணுவ ஆர்வத்தை மையப்படுத்தி இப்போது
இராணுவத்தில் சேர விரும்பம் தெரிவிக்க வேறு வழியின்றி மகனின் ஆசைக்கு
ஒப்புதல் அளிக்கின்றனர் பெற்றோர். அதன்பிறகு இழந்துபோன காதல் எப்படி
அவருக்கு தங்கையின் தோழி உருவத்தில் மறுபடியும் கிடைத்தது, அவர்
மேற்கொண்ட இராணுவ கடமை என்ன ஆயிற்று என்று விடைசொல்லி முடிக்கின்றது
படம்.
இந்தப் படத்தை ஆரம்பத்தில் பார்ப்பவர்கள் அப்பா சூர்யாவை சுற்றி
இருப்பதாக எண்ணிக்கொண்டு மேலும் பார்க்க அது மகன் சூர்யாவை சுற்றி
வரும்போது கண்டிப்பாக ஏமாற்றமும் கதை எங்கே போகின்றது என்கிற வெறுப்பும்
ஏற்படுவது இயல்பு. ஆனால் அது மகன் சூர்யாவை சுற்றி இருப்பதை
புரிந்துகொண்டு படம் பார்க்க ஆரம்பித்தால் கதையும் கோர்வையாக
புரிகின்றது. சூர்யாவின் கடின உழைப்பை கண்டிப்பாக நான் பாராட்டியே ஆக
வேண்டும். ஒவ்வொரு பிரேமுக்கும் உருவம் மாறும் அவர் காட்சிகளின் தேவைக்கு
ஏற்ப தன்னுடைய உடலமைப்பையும் மேனரிசங்களையும் மாற்றிக்கொள்வது அற்புதம்.
மிகச்சிறந்த கலைஞன் தான் என்பதை சூர்யா மறுபடியும்
நிரூபித்திருக்கின்றார். அதிலும் 20 வயது இளைஞனின் தோற்றமும் இராணுவ
வீரரின் தோற்றமும் வயதான அப்பா தோற்றமும் அவர் கண்டிப்பாக மிகவும்
கஷ்டப்பட்டு செய்திருப்பது தெரிகின்றது. இந்தப் படம் சூர்யாவுக்கு ஒரு
மைல்கல். இராணுவ வீரனாக வரும் சூர்யாவின் உடம்பும் கம்பீரமும் நாமும்
இராணுவத்தில் சோ்ந்தால் என்ன என்று தோண வைப்பது அருமை.
இளமையாக வரும் சிம்ரன் ஆச்சரியம். அதேசமயம் முதுமையாக வரும் சிம்ரனை ஏனோ
அவ்வளவாக இம்சிக்காமல் அப்படியே விட்டிருக்கின்றார்கள். ஒருவேளை சிம்ரன்
ஏற்கனவே வயதான தோற்றம் தருகிறார் என்பதாலா என்னவோ தெரியவில்லை. ஆனால்
சிம்ரனின் நடிப்பு நிறைவைத் தந்தது. சமீரா ரெட்டியும் நடிக்க முயற்சி
செய்திருக்கின்றார் ஆனால் மொழி புரியாததால் என்னவோ அவரால் அவ்வளவு
சிறப்பாக நடிக்க இயலவில்லை. ஒருசில காட்சிகளில் மட்டும் அற்புதமாக
பொருந்துகின்றார். தங்கையாக வருபவர் ஞாபகத்தில் பதிய மறுக்கின்றார்.
தங்கையின் தோழியாக வரும் திவ்யா அழகு. அதுவும் அவர் தனது காதலை சொல்லும்
இடம் அற்புதமான கவிதை. அதே சமயம் காதலனின் ஒப்புதலைப் பெற டெல்லி வரை
வந்திருந்தவளை பிடித்திருக்கின்றது பிடிக்கவில்லை என்று ஒரு முடிவாக
சொல்லாத முன் தொட முயற்சிக்கும் சூர்யாவிடம் அவர் காட்டும் கோபமும்
கேள்விகளும் அற்புதம். எனக்கும் உன்னோட தோள்ல சாய்ந்துக்கனும் உன்னை கிஸ்
பண்ணனும்னு ஆசைதான் ஆனால் என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்றதையே
சொல்லாமல் தொட பார்க்கிற நீ என்ன மாதிரியான மனுஷன் என்கிற அவருடைய கேள்வி
ஏனோ என்னை மிகவும் இம்சித்தது. வருவது கொஞ்சம் நேரம் என்றாலும் நிறைவாக
செய்திருக்கின்றார்.
இயக்குனரைப் பொறுத்தவரை கெளதம் மேனனுக்கு இது புதிது. அவரிடமிருந்து
இப்படி ஒரு படத்தை நானும் எதிர்பார்க்கவேயில்லை. அருமையாக
செய்திருக்கின்றார். ஒரு நிறைவான சேரன் படம் பார்த்த திருப்தி
நிலவுகின்றது. அப்பா சூர்யா வரும் காலக்கட்டங்களில் பிரேமின் ஒவ்வொரு
அங்குலத்தையும் அந்தக் காலக்கட்டங்களுக்கு ஏற்ப வடிவமைத்திருப்பது அருமை.
அப்பாவிலிருந்து மகன் சூர்யா வரைக்குமான பல்வேறு காலமாற்றங்களை அற்புதமாக
இயக்கியிருக்கின்றார். ஒளிப்பதிவு கொஞ்சம் எரிச்சலை உண்டாக்கினாலும்
நன்றாக இருக்கின்றது. இசை படத்துடன் இணைந்திருப்பது அழகு. ஹாரிஸ் ஜெயராஜ்
சில இடங்களில் வியக்க வைக்கின்றார். இருப்பினும் சில பாடல்கள்
திணிக்கப்பட்டதுபோலிருக்கின்றது. பாடல்களை காட்சியாக்கியிருக்கும் விதம்
அருமை. அமெரிக்காவையும் காஷ்மீரையும் இதுவரை இந்திய சினிமாக்களில்
காண்பிக்காத வண்ணம் அழகாக காண்பித்திருப்பது அருமை. வசனங்கள் சில
இடங்களில் மின்னுகின்றது.
கொஞ்சம் மேல்தட்டு வர்க்கம் என்று தோன்ற வைக்கும் அதிக ஆங்கில
உச்சரிப்புகள் கொஞ்சம் நெருடலைக்கொடுத்தாலும் நடக்கும் நிகழ்வுகள் அதை
மறக்கடிக்கின்றன. சாதாரணமாக ஒத்துக்கொள்ள முடியாத சில காட்சிகளும் உண்டு.
ஆனால் அப்பாவும் மகனும் நண்பர்கள் என்று காண்பிப்பதற்காக இருவரும் ஒன்றாக
உட்கார்ந்து பீர் அடிப்பது போல் காண்பிக்கும் தமிழ் சினிமாவின் வழக்கமான
அறிவுகெட்டத்தனம் இல்லாதது கொஞ்சம் ஆறுதல். காட்சிகள் தொடர்ச்சியாக
இல்லாது ஒரு குறை போலிருந்தாலும் அப்பா மற்றும் மகனின் வாழ்க்கயின்
பல்வேறு பதிவுகள் என்கிற வகையில் அவை கோர்வையாகத்தான் இருக்கின்றன.
ஒவ்வொரு காட்சியில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் பின்னால் எதனுடனோ தொடர்பு
இருக்கின்றது. ஒரு சில அபத்தங்களும் இந்த படத்தை அபத்தத்தை
தேடுபவர்களுக்கு பிடிக்காமல் செய்துவிடுகின்றன. எனக்கு என்னவோ இயக்குனர்
சில அபத்தங்களை சுவாரசியம் கருதியே வைத்திருப்பது போலிருந்தது
இல்லையென்றால் இவ்வளவு நீளப் படத்தை பார்ப்பதும் கடினம்தான். ஒரு உதாரணம்
எல்லா தமிழ் படத்திலும் வரும் வகையில் ஒரே பாடலில் கதாநாயகன் சிறப்பான
நிலைக்கு வந்து வீடெல்லாம் கட்டி முடிப்பது. ஆனால் அப்படி இல்லையென்றால்
ஏற்கனவே நீளமான படத்தில் சூா்யா எப்படி எல்லாம் முன்னுக்கு வந்தார்
என்பதை விரிவாகக் காட்டுதல் இன்னமும் நீட்டித்து போரடித்துவிட வைக்கும்.
ஒரு நாவலைப் படிப்பதுபோல்தான் இந்தப் படமும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும்
கீழே வைத்தல் முடியாதது. அதுபோலவே இயல்பான காதலும் காமமும் கூட அசிங்கம்
இல்லை என்றுதான் படம் உணர வைக்கின்றது. காமத்தையும் காதலாகத்தான்
காட்டப்பட்டிருக்கின்றது. அப்பாவை இத்தனை வயதுக்குப் பிறகும் வா போ
என்றும் பெயர் சொல்லியுமே பேசும் அம்மா தமிழ்சினிமாவுக்கு கொஞ்சம்
புதியதுதான். அப்பா என்று அழைப்பதை விட டாடி என்றும் மாமா அத்தை என்பதை
விட அங்கிள் ஆண்டி என்றும் அழைக்கும் பிள்ளைகளும் மருமகள்களும்கூட
கொஞ்சம் நெருடல்கள்தான். இருப்பினும் இதன்மூலம் இயக்குநர் காண்பிக்க
விழைவது என்ன என்பது அவ்வளவாக விளக்கப்படவில்லை.
இரசித்த தருணங்கள் மகிழ்ந்த தருணங்கள் அழுத தருணங்கள் எரிச்சல்பட்ட
தருணங்கள் என்று இந்த மொத்த படமே எனக்கு ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு
போலத்தான் இருந்தது. இருப்பினும் ஒரு நிறைவான அனுபவத்தை வழங்க படம்
தவறவில்லை. ஒருசில காட்சிகள் திரையரங்கை விட்டு வெளியே வந்தபின்னும்
நினைவிலிருந்து நீங்க மறுத்தன.
சண்டைக் காட்சிகள் இயல்பாக இருந்தது ஆச்சரியம் அதுவும் கெளதம் மேனனின்
படத்தில். டெல்லியில் பையனை கடத்திக்கொண்டு போன ரெளடிகளுடன் சூா்யா
மோதும் இடம் இதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு. கிளைமாக்ஸ் இராணுவ
சண்டைக் காட்சி அற்புதம். என்ன நடக்குமோ என்று கொஞ்ச நேரம் சீட்டின்
நுனியில் உட்கார வைத்துவிட்டார். படம் முழுவதுமே கொஞ்சம் சாப்டாக போவது
சிலருக்கு சீக்கிரமே தூக்கத்தை வரவழைக்கலாம். ஆனால் எனக்கு அனுபவமாகவே
இருந்தது. காதலி இறந்தபின் அப்பா அம்மாவிடம் போனில் அழுது அலறும் மகன்
'We made love daddy' என்று அங்கலாய்ப்பது தமிழ் சினிமாவுக்கு நிச்சயம்
புதிது. அதுபோலவே காதலியாக ஏற்றுக்கொண்டதாக கூறிய மறுகணமே தங்கையின்
தோழியுடன் படுக்கையில் விழும் காட்சிகளும் கொஞ்சம் நெருடலைக்கொடுத்தாலும்
இயல்பான காதலாலான காமத்தைத்தான் அது காட்டுகின்றது என்று
எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஒருவேளை
முந்தைய காதலின் வடுக்களுக்கு இது தேவையான வடிகால் என்றும்
எடுத்துக்கொள்ளலாம்.
மொத்தத்தில் இந்த படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகளில் ஒரு
சிலவற்றையாவது தங்கள் சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்கு இந்தப்
படம் ஒரு சிறப்பான அனுபவம். எனக்கு அப்படியே...
நன்றி...
--
மிக்க அன்புடன்,
ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
http://tamil.sripauljoseph.com/
தீட்டாத ஓவியங்களும் தீராத எண்ணங்களும்...
தமிழமுதம் - http://www.tamizhamutham.org/
இயல், இசை, நாடகம்...
"வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏற்றி இனிதருள் பருக மாட்டார்
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே" --- மாணிக்க வாசகர்
எறும்புகள்-Erumbugal
- A DEBATE IN PUDUCHERRY
- Why has the Tamil world NOT produced a quantum….?
- பிரிட்டிஷ்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி’
- நாமார்க்குங் குடியல்லோம்(No one is subject to anyone)
- Durga is Sumero Dravidian
- ‘என்னக்கென்ன?’
- LACK OF POLITICAL WILL OF THE UNION GOVERNMENT DEPRIVED TAMILS OF CAUVERY WATERS FOR DECADES
- மூக்கறுப்பு யுத்தம்
- [agathiyar] Samana Vs Ajivaka
- Muruga


